110. அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோயில்
இறைவன் அமிர்தகடேஸ்வரர்
இறைவி அபிராமியம்மை
தீர்த்தம் அமிர்த தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்
தல விருட்சம் வில்வம், பிஞ்சிலம் (ஜாதி முல்லை)
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருக்கடவூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருக்கடையூர்' என்று வழங்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் இரயில் பாதையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thirukadaiyur Gopuramதேவர்கள் பாற்கடலில் தோன்றிய அமுதத்தை விநாயகரை வணங்காமல் உண்ணச் சென்றனர். அதனால் விநாயகர் அக்குடத்தை மறைத்து விட்டார். தேவர்கள் தமது தவறை உணர்ந்து வேண்ட, அவரும் இத்தலத்தில் கலசத்தைக் கொடுத்தார். அந்த கலசம் வைத்த இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியதால் இத்தலத்து மூலவர் 'அமிர்தகடேஸ்வரர்' என்ற திருநாமம் பெற்றார். பிரளயம் தோன்றியபோது இத்தலம் அதைக் கடந்து நின்றதால் 'கடவூர்' என்று பெயர் பெற்றது.

மூலவர் 'அமிர்தகடேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அபிராமியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

அமிர்த கலசத்தை மறைத்தால் இத்தலத்து விநாயகப் பெருமான் 'கள்ள வாரணப் பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். வெளி மண்டபத்தில் 'காலசம்ஹார மூர்த்தி' தெற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். மிகப் பெரிய உற்சவ மூர்த்தி. வருடத்தில் ஒருநாள் மட்டும் சித்திரை பிரம்மோற்சவத்தின் 6 ஆம் நாளன்று 'காலசம்ஹார மூர்த்தி' புறப்பாடு நடைபெறும்.

Thirukadaiyur Amman Thirukadaiyur Utsavarஅட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்று. காலனைக் காலால் உதைத்தத் தலம். திருக்கண்டியூர், திருவதிகை, திருசிறுகுடி, திருப்பறியலூர், கொருக்கை, வழுவூர், திருக்கோயிலூர் ஆகியவை மற்ற வீரட்டத் தலங்கள்.

மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயருக்கு பதினாறு வயதில் ஆயுள் முடிந்து விடும் என்று அறிந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். ஆயுள் முடியும் தருணம் வந்தபோது யமதர்மன் வந்து தமது பாசக்கயிற்றை வீச, எமனைக் கண்டு கட்டியணைத்துக் கொண்டிருந்த லிங்கத்தின்மீது பாசக்கயிறு பட்டது. சிவபெருமான் வெளிப்பட்டு யமனை உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்து மார்க்கண்டேயருக்கு 'என்றும் பதினாறாக இருப்பாயாக' என்று வரமளித்த தலம். இன்றும் ஆயுள் விருத்திக்காக தமது சஷ்டியப்த பூர்த்தி நிறைவையொட்டி பலர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

Thirukadaiyur Kalanமார்க்கண்டேயர் தமது சிவபூஜைக்காக கங்கைத் தீர்த்தத்தைக் கொண்டு வந்து பூஜை செய்தார். அவருக்காக சிவபெருமான் அருகில் உள்ள கடவூர் மயானம் கோயிலில் உள்ள கிணற்றில் கங்கையைப் பொங்கச் செய்தார். அதைக் கொண்டு மார்க்கண்டேயர் சிவபூஜை செய்தார். இன்றும் அந்த கிணற்றில் இருந்துதான் சுவாமி அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு வருகின்றனர். தேவாரப் பாடல் பெற்ற இந்தத் கடவூர் மயானம் கோயில், இத்தலத்திற்கு பின்புறம் கிழக்கு திசையில் சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

அமாவாசை அன்று தனது பக்தர் அமிராமி பட்டருக்காக தஞ்சை மன்னருக்கு அன்னை முழு நிலவைக் காட்டியருளிய தலம். அபிராமி பட்டர் 'அபிராமி அந்தாதி' பாடிய தலம். தை அமாவாசை அன்று இந்நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்படுகிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் குங்கலியக் கலய நாயனார், காரி நாயனார் ஆகியோர் இத்தலத்தில் பிறந்து முக்தி பெற்ற தலம்.

சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றான 'திருக்களிற்றுப்படியார்' பாடிய 'உய்யவந்த தேவ நாயனார்' அவதரித்த தலம்.

பிரம்மா, மார்க்கண்டேயர், அகத்தியர், புலஸ்திய முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com